மூடுக

    வரலாறு

    கள்ளக்குறிச்சி மாவட்டம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டசபையில், 2019 ஜனவரி 8 ஆம் தேதியன்று 33 வது மாவட்டமாக விழுப்புரத்திலிருந்து பிரித்து அறிவிக்கப்பட்டது. பின்னர் புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசாணை எண்.424 மற்றும் 425 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிர்வாகப் பிரிவு (வ.மே 1(1) நாள் 12.11.2019 ன்படி பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 34 வது மாவட்டமாக 26.11.2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற (33 வது மாவட்டமாக, தென்காசி துவக்கப்பட்டது) மாபெரும் விழாவில் துவக்கி வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், 2 வருவாய் கோட்டங்களையும், 7 வட்டங்களையும், 562 வருவாய் கிராமங்களையும் மற்றும் 24 குறுவட்டங்களையும் உள்ளடக்கியது. இம்மாவட்டத்தில் 412 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண். 79 ன் (உளுந்தூர்பேட்டை – சேலம்) ஒருங்கே அமைந்துள்ள மாவட்டத் தலைமையகமான கள்ளக்குறிச்சிக்கு அருகில் சேலம், திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய விமான நிலையங்கள் உள்ளன.

    மழைப்பொழிவு, கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் மற்றும் ஏரிப்பாசனம் ஆகியவற்றை நீராதாரமாகக் கொண்ட விவசாயம் சார்ந்த இம்மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், கரும்பு, உளுந்து போன்றவை முக்கியமான பயிர்களாகும்.

    550.70 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கல்வராயன்மலைகள் மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த முக்கிய பகுதிகளாகும். பழங்குடி மக்களை அதிகமாகக் கொண்ட இம்மலையில் பெரியார், மேகம், சிறுக்கலூர் ஆகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் சின்ன திருப்பதி கோயில் ஆகியவை அமைந்துள்ளன. திருக்கோவிலூரில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோயில், வீரட்டனேஷ்வரர் கோயில், கபிலர் குன்று, உளுந்தூர்பேட்டை பரிக்கலில் அமைந்துள்ள லகஷ்மி நரசிம்மர் கோயில், சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ஆதிரங்கன் ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோயில்களாகும்.